மயிலாடுதுறை-திண்டுக்கல் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு
மயிலாடுதுறை-திண்டுக்கல் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது
நெல்லையில் இருந்து ஈரோடு மற்றும் மயிலாடுதுறைக்கு இணைப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கொடைக்கானல் ரோட்டில் ஈரோட்டுக்கு ஒரு ரெயிலாகவும், மயிலாடுதுறைக்கு மற்றொரு ரெயிலாகவும் பிரிந்து செல்லும்.
கொரோனாவுக்கு பிறகு இந்த ரெயில் நெல்லை -ஈரோடு ரெயிலாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல் வரை ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலையும் மதுரை - செங்கோட்டை ரெயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரெயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதி தீபாவளி முதல் மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை ரெயில்கள் (16847/16848) மற்றும் மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் (06665/06662) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரெயிலாக புதிய ரெயில் எண்களுடன் இயக்கப்படுகிறது.
அதன்படி மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ெரயில் (16847) மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ெரயில் (16848) செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும். இந்த ெரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ெரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்புடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.