சமூக வலைத்தளத்தில் போலி முகவரி உருவாக்கி பணம் பறிப்பு


சமூக வலைத்தளத்தில் போலி முகவரி உருவாக்கி பணம் பறிப்பு
x

திசையன்விளை அருகே சமூக வலைத்தளத்தில் போலி முகவரி உருவாக்கி பணம் பறித்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

திருநெல்வேலி

திசையன்விளை அருகே சமூக வலைத்தளத்தில் போலி முகவரி உருவாக்கி பணம் பறித்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலி முகவரி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை காரம்பாட்டைச் சேர்ந்தவர் அந்தோணிதாஸ். இவருடைய மகன் வளன் (வயது 31).

இவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் என்னுடைய முகவரியை போல் போலி முகவரியை உருவாக்கி அதில் என்னுடைய புகைப்படத்தை வைத்து நான் கூறுவது போல், மருத்துவமனையில் பேச முடியாமல் உள்ளேன். எனவே, எனது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புங்கள், என்று சிலர் கூறியுள்ளனர். அந்த நபர்கள் ஒரு வங்கி கணக்கு எண்ணும் கொடுத்துள்ளனர். இதை நம்பிய என்னுடைய உறவினர் ஒருவர் "போன் பே" மூலம் ரூ.18 ஆயிரம் அனுப்பி உள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதை அறிந்த நான் எனது உறவினர்கள், நண்பர்களிடம் பணம் அனுப்பாதீர்கள். ஏமாற்று வேலை என்று விழிப்புணர்வு தகவல் அனுப்பியுள்ளேன்.

ஆகவே, போலி முகவரி உருவாக்கி பணம் பறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது உறவினர் இழந்த பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story