கத்தியை காட்டி மிரட்டி விவசாயியிடம் பணம் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி விவசாயியிடம் பணம் பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆம்பூர் சாய்பாபா தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). கூலி வேலை செய்து வருகிறார். இவர் அங்குள்ள சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றார். அங்கு தியேட்டர் வளாகத்தில் நின்றுகொண்டிருந்த இவரை, 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்த சீனிவாசனிடம் 250 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
இதைுபார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த அஸ்கர் அலி (21), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அருண் (30) என்பதும், இருவரும் பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கடந்த வாரம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வீட்டில் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.