போலீஸ் போல் நடித்து தொழிலாளியிடம் ரூ.16 ஆயிரம் பறிப்பு


போலீஸ் போல் நடித்து தொழிலாளியிடம் ரூ.16 ஆயிரம் பறிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:45 PM GMT)

தூசி அருகே போலீஸ் போல் நடித்து தொழிலாளிடம் ரூ.16 ஆயிரம் அபேஸ் செய்து விட்டு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

தூசி

தூசி அருகே போலீஸ் போல் நடித்து தொழிலாளிடம் ரூ.16 ஆயிரம் அபேஸ் செய்து விட்டு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39), கூலி தொழிலாளி. இவர் செய்யாறு அருகே பைங்கினர் கிராமத்தில் தான் செய்த வேலைக்கு கூலியை பெற்றுக்கொண்டு கடைக்கு சென்றார். அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரம் சாலை வழியாக ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

பாண்டியம்பாக்கம் கூட்டு ரோடு அருகே வந்தபோது வயிற்று உபாதைகாக மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.

கஞ்சா சோதனை செய்வதாக...

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர், ''நான் போலீஸ். கஞ்சா கேஸ் சம்பந்தமாக சோதனை செய்து வருகிறேன். நீ ஏதாவது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருக்கிறாயா?'' என கேட்டு ரமேஷ் டவுசர் பாக்கெட்டில் சோதனை செய்வதுபோல் பார்த்தார்.

அப்போது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனே ரமேஷ் அவரிடம், ''நான் வேலை செய்து கூலியை வாங்கி வருகிறேன். அதனைத்தான் டவுசர் பாக்கெட்டில் வைத்துள்ளேன்'' என்றார்.

உடனே அந்த பணத்தை அவரது பாக்கெட்டிலேயே மீண்டும் வைப்பதுபோல் பேசிய அவர், பைக்கில் கஞ்சா ஏதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்டு அதை எடுக்கும்படி மர்ம நபர் கூறியுள்ளார்.

கஞ்சா எதுவும் இல்லை என. வேண்டுமானால் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறி மோட்டார்சைக்கிளில் இருந்த பொருட்களை எடுத்தார்.உடனே அந்த நபர் நீங்கள் செல்லலாம் என ரமேசிடம் கூறிவிட்டு மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் காஞ்சீபுரம் மார்க்கமாக சென்றுவிட்டார்.

வழக்குப்பதிவு

மர்ம நபர் சென்றவுடன் டவுசர் பாக்கெட்டை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.16 ஆயிரத்து 200 காணாததை கண்டு அதிர்ச்சியானார். இதனை அந்த மர்மநபர் அபேஸ் செய்து விட்டு தப்பியது குறித்து தூசி போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Next Story