விடுதி உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல்
விடுதி உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுக்கும் நபர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார்களை மனுக்களாக வழங்கினர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. சில மனுக்களை அந்தந்த பிரிவு போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாகாயத்தை சேர்ந்த விடுதி உரிமையாளர் ஒருவர் அளித்துள்ள மனுவில் மனுவில் கூறியிருப்பதாவது:-
கந்துவட்டி கேட்டு மிரட்டல்
நான் அரியூரில் தங்கும் விடுதி நடத்தி வருகிறேன். எனது விடுதிக்கு ஒருவர் வந்தார். அவர் தான் பைனான்சியராக உள்ளதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவரிடம் நான் ரூ.8 லட்சம் வட்டிக்கு வாங்கினேன். இந்த தொகைக்கு வட்டியாக ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் பிடித்துக்கொண்டு ரூ.6 லட்சத்து 96 ஆயிரம் கொடுத்தார்.
பின்னர் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.8 லட்சத்தை 3 மாதத்துக்குள் திருப்பித்தர வேண்டும் என்றார். அதன்படி நானும் அவரிடம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். இந்தநிலையில் தற்போது கந்து வட்டி போட்டு கூடுதலாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வருகிறார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கணவர் மீது நடவடிக்கை
தாராபடவேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில், நான் கலப்பு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 18 வயதில் மகளும், 16 வயதில் மகனும் உள்ளனர். நான் உழைத்து வீடு வாங்கினேன். இந்தநிலையில் எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார். மேலும் எனது பெயரில் உள்ள வீட்டை அவரது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கொடுமைப்படுத்துகிறார்.
நான் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டினேன். அந்த கடனையும் நான் தான் அடைத்து வருகிறேன். வீட்டுக்காக எங்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கிறார். எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று குடும்பபிரச்சினை, நிலப்பிரச்சினை, பணப்பிரச்சினை குறித்து பலர் புகார் மனுக்களை அளித்திருந்தனர்.