தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல்
கோத்தகிரியில் தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ரூ.30 ஆயிரம்
கோத்தகிரி பாப்டிஸ்ட் காலனி பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவரது மகன் டோம்னிக் சேவியர் என்ற ரவி. கூலித்தொழிலாளி. தர்மோனா பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவரது மகன்கள் சங்கீத் குமார் (வயது 37) மற்றும் பாலா (34). இவர்கள் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டோம்னிக் சேவியர் தனது குடும்ப கஷ்டம் காரணமாக சங்கீத் குமார், பாலாவிடம் ரூ.30 ஆயிரம் வட்டிக்கு கேட்டுள்ளார். அவர்கள் ரூ.30 ஆயிரத்துக்கு வட்டியாக ரூ.3 ஆயிரம் பிடித்தம் செய்து, மீதமுள்ள ரூ.27 ஆயிரம் கொடுத்தனர். மேலும் மாதத் தவணையாக ரூ.3 ஆயிரம் தவறாமல் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து டோம்னிக் சேவியர் தொடர்ந்து வட்டியை செலுத்தி வந்தார்.
2 பேர் கைது
இதற்கிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 6 மாதங்களாக வட்டியை கட்டவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் சங்கீத் குமார், பாலா 2 பேரும் நேற்று முன்தினம் டோம்னிக் சேவியர் வீட்டிற்கு சென்று, அவரை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்து, அவர் வாங்கிய பணத்திற்கு அசலும், வட்டியும் சேர்த்து ரூ.55 ஆயிரத்தை வருகிற 1-ந் தேதிக்குள் தர வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டோம்னிக் சேவியர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, சங்கீத் குமார், பாலா ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.