2 பேரை வாளால் வெட்டி பணம் பறித்த வாலிபர்கள்
2 பேரை வாளால் வெட்டி பணம் பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் வடமலைகுறிச்சி ரோட்டை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 42). இவர் இந்நகர் டி.டி.கே. ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வேல்முருகன் அங்கு படுத்திருந்தபோது 2 வாலிபர்கள் அவரிடம் வாளைக்காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அதற்கு வேல்முருகன் பணம் இல்லை என்று கூறினார். அப்போது அவர்கள் அங்கு பொருட்கள் வைத்துள்ள அறையின் சாவியை கேட்டபோது அவர்களிடமிருந்து வேல்முருகன் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து அந்த நபர்கள் வாளால் அவரை வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்த பாலமுருகன்(51) குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் இந்நகர் காசுக்கடை பஜாரில் ஒரு ஜவுளிக்கடை முன்பு இரவு படுத்திருந்தபோது 2 வாலிபர்கள் அவரிடம் வாளை காட்டி மிரட்டி ரூ.100 பறித்ததுடன், அவரை வாளால் வெட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.