வியாபாரியை காரில் கடத்தி பணம் பறிப்பு;சித்தா டாக்டர்-டிரைவர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே வியாபாரியை காரில் கடத்தி பணம் பறித்த சித்தா டாக்டர்-டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே வியாபாரியை காரில் கடத்தி பணம் பறித்த சித்தா டாக்டர்- டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சித்தா டாக்டர்
நெல்லை பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 38). சித்தா டாக்டரான இவர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் பகுதியில் கருத்தபாலம் அருகே பொதிகை ஆயுர்வேதம் என்ற சித்த மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் மற்றொரு முத்துகுமார் (வயது 41). மளிகைப்பொருட்கள் வியாபாரம் செய்து வரும் இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு குழந்தை இல்லாததால், சித்தா டாக்டர் முத்துகுமாரிடம் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார். இதற்காக ஒவ்வொரு முறையும் சித்த மருத்துவமனைக்கு செல்லும்போது டாக்டரிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார்.
சிறப்பு மருந்து தருவதாக கூறி...
இந்த நிலையில் வியாபாரியிடம் முத்துகுமாரை தொடர்பு கொண்ட சித்தா டாக்டர் முத்துகுமார், குழந்தைப்பேறுக்கான சிறப்பு மருந்துகள் வந்திருப்பதாகவும், அவற்றின் விலை ரூ.10 ஆயிரம் என்றும், அதனை காரில் எடுத்து கொண்டு புதியம்புத்தூருக்கு வந்து தருவதாகவும் கூறினார்.
அதன்படி, சித்தா டாக்டர் முத்துகுமாரும், அவரது டிரைவரான நெல்லையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பேச்சிமுத்துவும் (20) காரில் புதியம்புத்தூர்- ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் காத்திருந்தனர்.
காரில் கடத்தி பணம் பறிப்பு
அப்போது அங்கு வந்த முத்துகுமாரை காரில் ஏற்றி கொண்ட சித்தா டாக்டர், பணம் தந்தால் சிறப்பு மருந்தை தருவதாக கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சித்தா டாக்டரும், டிரைவரும் கத்தியைக் காட்டி மிரட்டி முத்துகுமாரை காரில் கடத்தி சென்று, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்தனர். பின்னர் அவரை காரில் சிறிது தூரம் கடத்தி சென்று இறக்கி விட்டு சென்றனர்.
கைது
இதுகுறித்து வியாபாரி முத்துகுமார் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக சித்தா டாக்டர் முத்துகுமார், கார் டிரைவர் பேச்சிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.