மரக்காணத்தை சேர்ந்தசெல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.3¼ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
மரக்காணத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.3¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). இவர் செல்போன்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெலிகிராம் ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது அவர், முத்துக்குமாரிடம் உங்களுடைய கடைக்கு தேவையான செல்போன்களை குறைந்த விலைக்கு மொத்தமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய முத்துக்குமார், தனது கடைக்கு தேவையான செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக, தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தனது போன்பே மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு 6 தவணைகளாக மொத்தம் ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், முத்துக்குமாருக்கு வழங்க வேண்டிய செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்காமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். அந்த நபரை முத்துக்குமார் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோது டெலிகிராம் குழுவில் இருந்து முத்துக்குமாரை பிளாக் செய்துவிட்டார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.