நகையை அதிக தொகைக்கு அடகு வைக்க வேண்டும் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு;பெண் உள்பட 4 பேர் கைதுபெருந்துறை அருகே பரபரப்பு
பெருந்துறை அருகே நகையை அதிக தொகைக்கு அடகு வைக்க வேண்டும் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் பறித்ததாக பெண் உள்பட 4 பேரை போலீசாரை கைது செய்தனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே நகையை அதிக தொகைக்கு அடகு வைக்க வேண்டும் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் பறித்ததாக பெண் உள்பட 4 பேரை போலீசாரை கைது செய்தனர்.
நகையை அதிக தொகைக்கு...
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் சில்லாங்காட்டுபுதூரைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 27). இவர் பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில், நகை கடன் கேட்டு வரும் நபர்களுக்கு சேவை செய்து, அதன் மூலம் கமிஷன் பெறும் தொழிலை செய்து வருகிறார்.
அவரை நேற்று முன்தினம் செல்போன் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நடராஜிடம் அந்த நபர் கூறுகையில், 'என்னுடைய 30 பவுன் நகைகள் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு பகுதியை மீட்டு குன்னத்தூர் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் அதிக தொகைக்கு அடகு வைக்க வேண்டும். எனவே அதற்கு உதவி செய்ய பணத்துடன் விஜயமங்கலம் வரவேண்டும்,' என தெரிவித்து உள்ளார்.
பணம் பறிப்பு
இதை நடராஜ் உண்மை என நம்பியதுடன், பணத்துடன் மோட்டார்சைக்கிளில் விஜயமங்கலம் அருகே உள்ள பொன்முடி பிரிவு ரோட்டுக்கு சென்று உள்ளார். அவரை கண்டதும், அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவா் ஓடிச்சென்று நடராஜின் மோட்டார்சைக்கிள் சாவியை எடுக்க முயன்று உள்ளார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம். எனவே விபரீதம் நடக்கப்போகிறது என்பதை அறிந்து கொண்டு உடனே பணப்பையுடன் அங்கிருந்து மெயின் ரோட்டுக்கு ஓடி வந்து உள்ளார். ஆனால் அவர் மெயின் ரோட்டை சென்று அடைவதற்குள், மேலும் 2 பேர் ஓடிச்சென்று அவரை வழிமறித்து தாக்கினர்.
பின்னர் அவர் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறித்துக்ெகாண்டு, ஏற்கனவே அங்கு தயாராக நின்று கொண்டிருந்த காரில் ஏறி 3 பேரும் தப்பி சென்றனர். அப்போது பணத்தை பறித்து சென்ற கொள்ளையர்களின் கார் எண்ணை நடராஜ் குறித்துக்கொண்டார். உடனே அவர் இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பி சென்ற கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் கொள்ளையர்கள் தப்பி சென்ற கார் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த காருக்குள் 3 பேர் இருந்து உள்ளனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற் ெகாண்டனர். விசாரணையில், 'அவர்கள் திருப்பூர் நெருப்பெரிச்சலைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் ரத்தீஸ்குமார் (30), திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பரமசிவம் மகன் சரண்நித்தீஸ் (22), திருப்பூர் வண்ணான்காடு பகுதியை சேர்ந்த காசிவிஸ்வநாதன் மகன் மணிகண்டன் என்கிற அய்யப்பன் (27) என்பதும், நடராஜிடம் இருந்து பணத்தை பறித்ததை ஒப்புக்கொண்டதுடன், பணத்தை பறிக்க மூளையாக செயல்பட்டது பெருந்துறை கராண்டிபாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செங்காவேரி (25),' எனவும் கூறினர்.
இதைத்தொடர்ந்து செங்காவேரி, ரத்தீஸ்குமார், சரண்நித்தீஸ், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
பரபரப்பு
கைது செய்யப்பட்ட 4 பேரும் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.