கூடுதல் கட்டணம் வசூல் எதிரொலி: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தனியார் பஸ்களில் ஆய்வு- பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதனை
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதனை செய்தனர்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதனை செய்தனர்.
கூடுதல் கட்டணம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தனியார் பஸ்களில் ரூ.2 முதல் ரூ.7 வரை கட்டணம் உயர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. பவானி - மேட்டூர், ஈரோடு - பெருந்துறை, பெருந்துறை - கோவை, ஈரோடு - கோவை உள்பட பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு உத்தரவு இல்லாமல் தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும், அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டு உள்ளார்.
இந்தநிலையில் ஈரோடு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது வெளியூரில் வந்த தனியார் பஸ்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை அதிகாரிகள் வாங்கி பரிசோதித்தனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா? என்று சோதனையிடப்பட்டது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.