அனுமதி இல்லாமல் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு விற்பனை


அனுமதி இல்லாமல் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு விற்பனை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார்.

ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்குகள் குழுவின் கள ஆய்வு மற்றும் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களின் வரிப்பணத்தினை தவறான முறையில் செலவு செய்வது, கையாள்வது, சரியான முறையில் அரசு எந்திரத்தை முறையாக பயன்படுத்தாமல் இருப்பது,

அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செய்திடாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது மத்திய, மாநில கணக்காய்வு குழு ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து வருகிறது.

இன்றைய நாளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள ஆய்வு செய்து, ஆய்வுக்கூட்டத்தில் கலந்துரையாடி அதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்திருக்கின்றோம்.

134 நிறுவனங்களில் 42 நிறுவனங்களுக்கு அனுமதியே இல்லாமல் அதிகளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள் அழிப்பு

2018-19-ம் ஆண்டு 33 நிறுவனங்கள் தடையில்லா சான்று இல்லாமலேயும், 7 நிறுவனங்கள் காலாவதியான பிறகும் நிலத்தடி நீரை எடுத்திருக்கிறார்கள். இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீர்வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

2018-19-ம் ஆண்டில் பால் தரமற்றதாகவும், சரியாக பராமரிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சி.ஏ.ஜி.யின் பரிந்துரையின் பேரில் அத்துறை செயலாளர், மேலாண்மை இயக்குனர் மற்றும் ஆணையாளரையும் விசாரணைக்கு அழைத்து முழு அறிக்கையினை தாக்கல் செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சட்டப்பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான சிந்தனைச்செல்வன், வேல்முருகன், பிரகாஷ், ஜவாஹிருல்லா, ஜே.எல்.ஈஸ்வரப்பன், ஏ.எம்.முனிரத்தினம், இணை செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story