ஊட்டியில் உச்சம்பெற்ற உறைபனி: அவலாஞ்சியில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு-பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அவலாஞ்சியில் மைனஸ் 4 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது. மேலும் ஊட்டியில் 26-வது நாளாக உறைபனி தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி
அவலாஞ்சியில் மைனஸ் 4 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது. மேலும் ஊட்டியில் 26-வது நாளாக உறைபனி தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உச்சம் பெற்ற உறைபனி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. இந்தக் காலங்களில் வெப்பநிலை அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தைத் தொட்டு, சில நாள்களில் மைனசுக்கும் கீழ் இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறிப் பயிர்கள் போன்றவை கருகும்.
இந்த நிலையில் சீதோஷ்ன நிலை மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. அந்த வரிசையைத் தொடர்ந்து பனிக்காலமும் 20 நாட்கள் தாமதமாக கடந்த நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கியது. இதையடுத்து ஊட்டியில் மீண்டும் மழை ஆரம்பித்ததால் பனிப்பொழிவு குறைந்து ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி பனிப்பொழிவு தொடங்கியது.
இந்த நிலையில் தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் 23-ல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் நாளை (சனிக்கிழமை) வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மைனஸ் 4 டிகிரி செல்சியஸ்
இதைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இது 26-வது நாளாக தொடர்கிறது. அதாவது காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் மாலை முதல் மறுநாள் விடியற்காலை வரை கடும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது.
ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 1.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதேபோல் அவலாஞ்சி பகுதிகளில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இந்த சீசனில் மாவட்டத்தில் முதல் முறையாக குறைந்தபட்சமாக நேற்று பதிவானது.
தொடர் பனிப்பொழிவால் தேயிலை தோட்டங்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக சேதமடைந்துள்ளன. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இடையே ஊட்டியில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்கின்றனர். மேலும் விவசாயிகள் தேயிலை தோட்டங்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளனர். இதற்கு இடையே மாவட்டத்தில் பல இடங்களிலும் மைதானங்கள் இருந்த புல்வெளிகள் தொடர் உறை பனிப்பொழிவு காரணமாக தற்போது கருகி வருகின்றன.
இதேபோல் வேலிவியு, குன்னூர், கோத்தகிரி, பர்லியார், வண்டிச்சோலை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் காணப்பட்டது. அதிகாலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.