ரூ.85 லட்சத்தில் கண் சிகிச்சை பிரிவு கட்டிடம்
பழனி அரசு மருத்துவமனையில் ரூ.85 லட்சத்தில் புதிய கண் பிரிவு சிகிச்சை கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட கண் சிகிச்சை பிரிவு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி., கலெக்டர் விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஆன்மிக மற்றும் சுற்றுலா நகரங்கள் ஒருங்கே அமையப்பெற்ற தொகுதி பழனி. எனவே பழனி மருத்துவமனையை தரம் உயர்த்தி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதைத்தொடர்ந்து தற்போது தரம் உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் பழனியில், 'நகர்புற நலவாழ்வு மையம்' என்ற வகையில் கூடுதலாக ஒரு மருத்துவ பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் மருத்துவ பிரிவு தொடர்பாக ரூ.8 கோடியில் 23 கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு முன்பு மருத்துவமனை செயல்பட வேண்டும். அதன்படி 50 படுக்கை வசதி கொண்ட சித்த மருத்துவமனை விரைவில் பழனியில் தொடங்க உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் கொடைக்கானல் அருகே உள்ள பூலத்தூர், பெருமாள்மலை ஆகிய பகுதிகளில் மருத்துவ அலுவலர், செவிலியர் குடியிருப்பு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லை அமைச்சர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில நோய் தடுப்பு இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பழனி நகர தி.மு.க. செயலாளர் வேலுமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், தி.மு.க. நகர பொருளாளர் வெங்கடசுப்பிரமணி, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத்தலைவர் விஜயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.