ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போன கண்மாய்கள்மீட்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போன கண்மாய்கள்மீட்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமல் போன கண்மாய்கள் மீட்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் ஓடைப்பட்டி பேரூராட்சி அமைந்துள்ளது.

கண்மாய்கள்

இந்த பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஓடைப்பட்டி பேரூராட்சியில் தென்பழனி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம், மூர்த்திநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,800 எக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு வாழை, தென்னை மற்றும் ஏராளமான காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதற்காக ஊஞ்சாலம்மன் கண்மாய், சோத்தான்குளம், கூலியான் குளம், தாதா முத்தன் கண்மாய் உள்பட 15-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் அமைக்கப்பட்டது. இந்த கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் கிணற்று பாசனம் மூலமும் விவசாயம் செய்தனர்.

ஆக்கிரமிப்பு

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த கண்மாய்கள் தூர்வாரப்படாமல் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. தண்ணீர் தேங்கும் கண்மாய்கள் புதா் மண்டி காணப்படுகிறது. இதனால் சிலர் கண்மாய்களை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து பயிர் சாகுபடி செய்து வருகி்ன்றனர். மேலும் மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர்.

இதன்காரணமாக 10 ஏக்கர் பரப்பளவிற்கு மேலான கண்மாய்கள் தற்போது சுருங்கி குட்டைபோல் மாறியுள்ளது. மேலும் கண்மாய் கரைகள் உடைந்து, நீர்மடைப்பகுதிகள் மற்றும் தண்ணீர் வெளியேறும் மதகுப்பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது.

விவசாயிகள் கோரிக்கை

கண்மாய்களில் கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகள் வளர்ந்து நிற்பதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. மேலும் தண்ணீர் வரத்தாகும் நீரோடைகள் மற்றும் கண்மாய்கள் அருகே உள்ள விளை நிலங்களுக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதனால் கண்மாய்களின் கரைகள் வழியாக விளைபொருட்களை விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.

எனவே விளை நிலங்களுக்கு செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமல் போன கண்மாய்களை மீட்டு தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வாழ்வாதாரம்

ஆனந்த், விவசாயி:- நான் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடைப்பட்டி பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். அப்போது இருந்தே கண்மாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதனால் அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. மேலும் கண்மாய்கள் சுருங்கி குட்டை போல் மாறியுள்ளது. தடுப்பணைகள் புதர்மண்டி காணப்படுகிறது. எனவே கண்மாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சுருளி முத்து, விவசாயி:- பருவ மழைக்காலங்களில் கண்மாயில் நீரை சேமித்து வைத்தால் தான் கோடை காலங்களில் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால் இந்த பகுதியில் கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இதனால் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பால் ஓடைப்பட்டி பகுதியில் உள்ள 15 கண்மாய்கள் இருக்கிற இடம் தெரியாமல் போனது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆழ்துளை கிணறு

சண்முகவேல், விவசாயி:- இன்று வரை தொடர்ந்து கண்மாய்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதே ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதற்கு காரணம். நிலங்கள் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர்மட்டத்தை பாா்க்கும்போது கண்மாய் பகுதியிலேயே அதிகமாக காணப்படுவதால் அதனை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். மேலும் அங்கு அரசு அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் கண்மாய்களில் நீர்மட்டம் உயராமல் விரைவில் வறண்டு விடுகிறது. எனவே கண்மாய் அருகே ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமேஸ்வரன், விவசாயி:- கண்மாய்களுக்கு அருகே உள்ள நிலங்கள் அனைத்தும் தற்போது தரிசாக காணப்படுகிறது. இதனை காணும்போது மிகவும் வேதனையாக உள்ளது. மேலும் கண்மாயை ஆக்கிரமித்து வருவதால் கண்மாய் இருக்கிறதா இல்லையா என விவசாயிகள் தேடும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் கண்மாய்களை தூர்வாருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

விவசாயிகள் இருந்தால்தான் நாட்டில் உணவு பொருட்கள் கிடைக்கும். மனித வளம் மற்றும் மக்களுக்குத் தேவையான விவசாய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை பாதுகாக்க கண்மாய்களை விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story