யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் வசதி
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் யுடிஎஸ் செயலி மூலம் 57 கிராமப்புற ரெயில் நிலையங்களில் காகிதமில்லாத டிக்கெட் எடுக்கும் வசதியை தெற்கு ரெயில்வே ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் யுடிஎஸ் செயலி மூலம் 57 கிராமப்புற ரெயில் நிலையங்களில் காகிதமில்லாத டிக்கெட் எடுக்கும் வசதியை தெற்கு ரெயில்வே ஏற்படுத்தியுள்ளது.
முன்பதிவில்லாத டிக்கெட்
முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுண்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யுடிஎஸ் செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போனில் இதை பதிவிறக்கம் செய்து, முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பதற்காக, இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இருப்பினும், ரெயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே, இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும். இதை விரிவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், தெற்கு ரெயில்வேயில் கிராமப்புற ரெயில் நிலையங்களில் (ஹால்ட் நிலையம்) யுடிஎஸ் செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
57 ரெயில் நிலையங்களில் அறிமுகம்
இதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 57 கிராமப்புற ரெயில் நிலையங்களில் இந்த வசதி புதிதாக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரெயில் நிலையம். இங்கு ரெயில் டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் வழங்குவார்கள்.
தற்போது, யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிலையங்களுக்கு உள்ளே நுழைவதற்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்து, ரெயிலில் பயணிக்க முடியும்.
யுடிஎஸ் செயலி
இதுகுறித்து தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் கூறும்போது, ஹால்ட் ரெயில் நிலையங்களில் முகவர்கள் மூலமாக முன்பதிவில்லாத டிக்கெட் கொடுக்கப்படும். தற்போது, யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்த நிலையங்கள் அருகே வசிக்கும் ரெயில் பயணிகள் பயனடைவார்கள். இந்த செயலி மூலமாக, சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றை ரெயில் நிலையங்களுக்கு உள்ளே நுழைவதற்கு முன்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்றனர்.