பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க வசதி: மாணவிகளின் மனக்குமுறலை தீர்க்கும் மாணவர் மனசு பெட்டி
பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க வசதியாக மாணவிகளின் மனக்குமுறலை தீர்க்கும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் மூலமே குழந்தைகள் அதிகம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்.
மாணவர் மனசு பெட்டி
கோர்ட்டுகளுக்கு வரும் பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் குற்றவாளிகளாக இருப்பவர்கள் உறவினர்கள், அக்கம் பக்கத்தினராகவே இருக்கிறார்கள். தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பதின்ம வயது பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் ஈரோடு மகளிர் கோர்ட்டுக்கு வரும் பல வழக்குகளின் தீர்ப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
2019-ம் ஆண்டு ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, மாணவிகளின் புகார்களை கேட்க பள்ளிக்கூடங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். அதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிக்கூடங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டன. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆலோசனையின் பேரில் மாணவர் மனசு பெட்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வைக்கப்பட்டு உள்ளன.
ஆலோசனைக்குழு
தமிழ்நாட்டில் 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலை பள்ளிக்கூடங்கள், 6 ஆயிரத்து 177 அரசு உயர்-மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 37 ஆயிரத்து 391 பள்ளிக்கூடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாணவர் மனசு பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பெட்டி மட்டுமின்றி, மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் தலைமையிலான பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதில் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர், பெற்றோர் -ஆசிரியர் கழக உறுப்பினர் அல்லது பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர், ஒரு கல்வியாளர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த குழு முன்னிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர் மனசு பெட்டி திறக்கப்பட்டு அதில் புகார்கள் இருந்தால் அவற்றை படித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சமாளிக்க முடியாத பிரச்சினை
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,732 பள்ளிக்கூடங்களில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டிகள் வைக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறுகிறதா? மாணவ-மாணவிகள், குறிப்பாக பிரச்சினைக்கு ஆளாகும் மாணவிகள் தங்கள் மனக்குறைகளை, பிரச்சினைகளை கூறுகிறார்களா?, மாணவர் மனசு பெட்டி, மாணவிகளின் மனதை திறக்கிறதா?.
என்ற கேள்விகளுக்கு பதில்அளிக்கிறார் ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.கோபால்:-
மாணவர் மனசு பெட்டி திட்டம் உண்மையிலேயே வரவேற்கத்தக்க திட்டமாகும். முன்பெல்லாம் மாணவர் மனசு பெட்டியாக அவர்களுக்கு பிடித்த ஆசிரிய-ஆசிரியைகள் இருப்பார்கள். சம்பந்தப்பட்ட மாணவி அல்லது மாணவன் நடவடிக்கை மாறினால் கண்டுபிடித்து விடுவோம். தொடர்ந்து அவர்களை கண்காணித்து, பிரச்சினையை கேட்டால், சிலர் மட்டுமே கூறுவார்கள். தங்களால் சமாளிக்க முடியாத பிரச்சினை என்றால் தங்களுக்கு பிடித்த ஆசிரிய-ஆசிரியையிடம் வந்து மேலோட்டமாக விவரங்கள் கூறுவார்கள். ஆசிரியர்களும் அதுபற்றி விசாரித்து வெளியில் யாருக்கும் தெரியாமல் பிரச்சினைகளை சரி செய்வார்கள்.
வாய்ப்பு
ஆனால், மாணவர் மனசு பெட்டி, அவர்கள் நேரடியாக யாரிடமும் எதையும் கூறாமல், எழுத்துப்பூர்வமாக தங்களை வெளிப் படுத்திக்கொள்ளாமலேயே தங்கள் புகார்களை கூற முடியும். பொதுவாக வீட்டிலும், வெளியிலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வு காண இது மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.
எங்கள் பள்ளிக்கூடத்தை பொறுத்தவரை, நாங்கள் சற்று எதிர்பார்ப்புடன்தான் மாணவர் மனசு பெட்டியை திறப்போம். எங்கள் குறும்புக்கார மாணவர்கள் எந்த புகாரும் இல்லாமல், கோரிக்கைகளாக எழுதுவார்கள். மதிய நேரத்தில் பள்ளி மெயின் கேட்டை மூடக்கூடாது. எங்களுக்கு விளையாட்டு மைதானம் வேண்டும். விளையாட்டுக்கு அதிக நேரம் வேண்டும் என்றெல்லாம் எழுதுவார்கள்.
இதில் உள்ள கோரிக்கைகளுக்கு என்ன பதில் என்பதை காலை வழிபாட்டு நேரத்தில் பொதுவாக கூறி விளக்கம் அளித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடனடி தீர்வு
குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியரும் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினருமான கே.முருகானந்தம் கூறியதாவது:-
மாணவ-மாணவிகளுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. பொதுவாக வீடுகளில் பெற்றோர் சரி இல்லை என்றால், அதன் வெளிப்பாடு மாணவ-மாணவிகளின் நடத்தையில் தெரிகிறது. எனவே மாணவர்கள் மீது அதிக அக்கறை செலுத்தி, சிறிது கண்டிப்புடன் வைத்து இருக்கிறோம். கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில், மாணவ-மாணவிகளின் கையில் செல்போன்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கமான வகுப்புகள் தொடங்கிய பிறகும் அவர்களிடம் இருந்து திரும்ப பெற முடியவில்லை. செல்போன்கள் மாணவ-மாணவிகளை தவறான வழியில் நடத்துகிறது. இதனால் பல பிரச்சினைகள் வருகின்றன. அது எங்கள் கவனத்துக்கு வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகிறது.
காவல்துறை நண்பர்கள், சமூக நலத்துறை, தன்னார்வ அமைப்புகள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கிறோம். இதனால் புகார்களுக்கான இடம் இருப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒழுக்கம்
ஆசிரியை ப.மங்கையர்க்கரசி கூறியதாவது:-
நாங்கள் பெண் குழந்தைகளை கவனமாக கண்காணிக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் விடுமுறை எடுத்தால் உடனடியாக பெற்றோரை தொடர்புகொள்கிறோம். ஏதேனும் பிரச்சினை என்றால் உடனடியாக அதற்கான தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
பிரச்சினைகள் இருந்தால் நாங்களே கேட்டுக்கொள்கிறோம். தொடுதல் பற்றியும், நல்ல- கெட்ட பழக்கங்கள் குறித்தும் எடுத்துக்கூறுகிறோம். அரசு பள்ளிக்கூடம்தானே என்று எங்கள் மாணவ- மாணவிகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் விடுவதில்லை.
குழந்தைகள் எங்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது ஒழுக்கம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். எனவேதான் ஆண்டுதோறும் எங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் மனசு பெட்டி நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதே பொதுவாக ஆசிரிய- ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.
நடுநிலைப்பள்ளிக்கூடங்களிலும் மாணவர் மனசு பெட்டி உள்ளது. எங்களிடம் குறைந்த அளவு குழந்தைகள்தான் உள்ளனர். அவர்களின் நடவடிக்கையில் சிறு மாற்றம் வந்து விட்டால் கூட எங்களால் கண்டுகொள்ள முடியும்.
நாங்கள் பெற்றோருடன் தொடர்பில் இருப்பதாலும், நட்புடன் இருப்பதாலும் பிரச்சினைகள் எங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
மீட்பு
ஆனால், சில கிராமப்பகுதிகளில் மாணவிகள் நடந்து செல்லும் வழியில் முதியவர்கள் கூட அவர்களை பின்தொடர்ந்து ஆபாசமாக பேசி சில்மிஷங்கள் செய்ய முற்படுவதும் நடந்து உள்ளது. இதுபற்றி ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து பிரச்சினையை சுமுகமாக முடித்து உள்ளனர். மாணவிகள் வரும் வழியில் கும்பலாக நின்று கொண்டு கிண்டல் செய்யும் வாலிபர்கள் குறித்தும் தகவல் அறிந்து போலீசாரால் பிரச்சினை சரி செய்யப்பட்டு இருக்கிறது. தாயின் 2-வது கணவர்கள் மூலம் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் பற்றிய விவரங்களும் அறிந்து அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் மாணவர் மனசு பெட்டி வைக்கும் முன்பே மாணவிகளின் மனசை அறிந்து ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
உண்மையில் மாணவர் மனசு பெட்டி மாணவிகளுக்கு அச்சமின்றி, தங்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் திட்டமாகவே இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.