கோஷ்டி மோதல்; 3 பேர் காயம்
பாளையங்கோட்டையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்தார். அவருடைய உடலை உறவினர்கள் தகனம் செய்துவிட்டு பாளையங்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோவில் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், இவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கினார்கள்.
இதில் ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த நம்பி ராமலிங்கம், பாலசுப்பிரமணியன், வெள்ளக்கோவிலை தர்மர் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தையொட்டி வெள்ளக்கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.