கோஷ்டி மோதல்; 6 பேர் கைது


கோஷ்டி மோதல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:31+05:30)

ஊட்டியில் நள்ளிரவில் இரு தரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் நள்ளிரவில் இரு தரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு கம்பியால் தாக்குதல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி புது அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 30). இவர் சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் எட்டின்ஸ் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த பட்பயர் பகுதியை சேர்ந்த ஆபிரகாம் ஜான், ஹரீஷ், பர்கான் ஆகிய 3 பேர் கிஷோர் மீது இடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் கிஷோருக்கும், ஆபிரகாம் ஜான் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கிஷோர் தனது நண்பர்களான மணிகண்டன், வினோத் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு, உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு கூறினார். தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அங்கு வந்தனர். பின்னர் 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். மேலும் நடுரோட்டில் இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

6 பேர் கைது

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தாக்குதலில் காயம் அடைந்து மயங்கிய கிஷோர், ஆபிரகாம் ஜானை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட கிஷோர், வினோத், மணிகண்டன் மற்றும் ஆபிரகாம் ஜான், ஹரிஷ், பர்கான் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story