கோஷ்டி மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் ரவிச்சந்திரன்(வயது 51). கூலி தொழிலாளி. இவருடைய மருமகள் சித்திரவள்ளி. இவர் தனக்கு சொந்தமான மாட்டை மேய்ச்சல் முடித்து தனது வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது அதே தெருவில் வசிக்கும் சின்னத்தம்பி மகன் சாமிநாதன் வீட்டு முன்பு வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களை, மாடு தின்பதற்கு முயன்றுள்ளது. இது தொடர்பாக சாமிநாதன் மற்றும் சித்திரவள்ளி இடையே தகராறு ஏற்பட்டு, பின்னர் கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டி, உருட்டு கட்டையால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கமலாதேவி மற்றும் பழனி ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தா.பழூர் போலீசில் ரவிச்சந்திரன் மற்றும் சாமிநாதன் தரப்பினர் தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர். இதில் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சாமிநாதன், கமலா தேவி, ராஜேந்திரன் ஆகிய 3 பேர் மீதும், சாமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் பழனி, ரவிச்சந்திரன், சித்திரவள்ளி ஆகிய 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.