கோஷ்டி மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி அருகே நடந்த கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருச்சி அருகே நடந்த கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கோஷ்டி மோதல்
திருச்சி கே.கே. நகர் அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 35). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார், எட்டரை சேர்ந்த மாசிலாமணி என்ற பம்பாய், சோமரசம்பேட்டையை அடுத்த காவல்காரன்பட்டி அருகே உள்ள புழுதேரி கிராமத்தை சேர்ந்த பிச்சுமணி உள்ளிட்டவர்கள் பணம் வைத்து சீட்டு விளையாடி வருவது வழக்கம்.
இந்நிலையில் தாயனூர் கீழக்காடு பகுதியை சேர்ந்த சின்னகருப்பன் (20), அவரது நண்பர்கள் மேலக்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21), கோபாலகிருஷ்ணன் (20) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் புழுதேரி கிராமத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிச்சுமணி உள்ளிட்டவர்களிடம் மாமூல் கேட்டுள்ளனர். இதனால் 2 தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாகியது. இதில் 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அரிவாள் வெட்டு
இந்த மோதலில் சின்னகருப்பன், விக்னேஷ் மற்றும் மாசிலாமணி என்ற பம்பாய், குமார் ஆகிய 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து பலத்த காயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.