முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்


முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
x

கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. எனவே முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை

கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. எனவே முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக இடைவெளி

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா வேகமாக பரவுகிறது. எனவே கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், சிறப்பு சிகிச்சை மையங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை நாள் ஒன்றுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்ற வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களின் நுழைவாயிலில் நுழைபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். கிருமிநாசினி வைக்க வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி

பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு பொது சுகாதாரத்திட்டத்தின் கீழ் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய பட்டியலை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். வெளிநாடுகளில் இருந்து யாராவது நோய் தொற்றுடன் வந்தால் அவர்கள் மாதிரியை மரபணு பகுப்பாய்வு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் சுய மருத்துவம் செய்திடாமல் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் 12-14 வயதுடையவர்கள் கார்ப்வேக்ஸ் தடுப்பூசியும், 15-17 வயதுடையவர்கள் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளலாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயது கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story