மயக்க பிஸ்கெட் கொடுத்து தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிப்பு


மயக்க பிஸ்கெட் கொடுத்து தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிப்பு
x

மயக்க பிஸ்கெட் கொடுத்து தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிப்பு

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூரில் வடமாநில தொழிலாளிக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து ரூ.23 ஆயிரத்தை மர்ம கும்பல் அபேஸ் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வடமாநில தொழிலாளி

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சகாதேவ் சவுத்ரி (வயது 34). இவர் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக சகாதேவ் சவுத்ரி பல்லடத்தில் இருந்து திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு சுதந்திர தினத்தன்று வந்தார். அப்போது அவர் அருகே 3 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் சகாதேவ் சவுத்ரியிடம் " நீங்கள் எந்த ஊருக்கு செல்கிறீர்கள்" என கேட்டுள்ளனர். அப்போது அவர் மேற்கு வங்க மாநிலத்திற்கு செல்வதாக கூறினார். நாங்களும் மேற்கு வங்கத்திற்கு தான் செல்கிறோம் என்று அந்த 3 ஆசாமிகளும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சகாதேவ் சவுத்ரியிடம் ரெயில் நிலையம் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ சாப்பிட்டு வருவோம் என அழைத்துள்ளனர். டீக்கடைக்கு சென்ற அவர்கள் சகாதேவ் சவுத்ரிக்கு ஒரு பிஸ்கெட் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட சகாதேவ் சவுத்ரி சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். உடனே அந்த ஆசாமிகள் சகாதேவ் சவுத்ரி வைத்திருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் செல்போன், பை மற்றும் அணிந்திருந்த ஆடைகள் போன்றவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

போலீசார் விசாரணை

மயக்கம் தெளிந்த நிலையில் அரை நிர்வாணமாக கிடந்த சகாதேவ் சவுத்ரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு விசாரித்துள்ளனர். அவர் நடந்த விபரத்தை தெரிவிக்கவும், பொதுமக்கள் அவருக்கு பல்லடம் செல்வதற்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர். பல்லடம் நூற்பாலைக்கு சென்ற சகாதேவ் சவுத்ரி நடந்த சம்பவம் குறித்து உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த காட்சிகளில் 3 பேர் கும்பல் யார்? என்று அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்த வடமாநில தொழிலாளிக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கெட்டை கொடுத்து, ரூ.23 ஆயிரம் மற்றும் செல்போனை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அபேஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story