'விவசாயிகளிடம் வாங்கும் கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும்'


விவசாயிகளிடம் வாங்கும் கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘விவசாயிகளிடம் வாங்கும் கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும்’ என எச்.ராஜா பேசினார்

சிவகங்கை

சிங்கம்புணரி,

விவசாயிகளிடம் வாங்கும் கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்று நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் எச்.ராஜா கூறினார்.

நம்ம ஊரு பொங்கல்

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சிங்கம்புணரி சீரணி அரங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் சிங்கம்புணரி ஒன்றிய, நகர பா.ஜனதா சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாக சிங்கம்புணரி பஸ் நிலையம் முன்பு உள்ள பா.ஜனதா ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மேளதாளங்களுடன் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களுடன் ஊர்வலமாக சீரணி அரங்கம் மைதானத்திற்கு சென்றனர். முன்னதாக நுழைவு வாயில் முன்பு கட்டப்பட்டிருந்த கோவில் காளைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்,ராஜா, மாவட்ட தலைவர் மேம்பல் சக்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எச்.ராஜா பேசும் போது, பாரம்பரியமான சிங்கம்புணரி சீரணி அரங்கம் வளாகத்தில் மாட்டுப் பொங்கல் அன்று மாபெரும் மஞ்சுவிரட்டு விழா, எருது கட்டு விழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த சீரணி அரங்கில் பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு பா.ஜனதா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். பேரூராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட நிர்வாகம் வேறு இடம் பார்க்க வேண்டும்.

போராட்டம்

கரும்பு கொள்முதல் செய்ததில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊழல் நடந்திருக்கிறது. ஒரு கரும்புக்கு வெட்டுக் கூலி உள்பட 17 ரூபாய் மட்டுமே பேசி இருக்கிறார்கள். ஏற்றுக் கூலி போக்குவரத்து செலவு 3 ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால் ஒரு கரும்புக்கு 33 ரூபாய் அரசு கணக்கு எழுதுகிறது. விவசாயிகளிடமிருந்து வாங்கும் கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்றார். நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.


Next Story