பெண் என்ஜினீயர் பெயரில் போலி கணக்கு
பெண் என்ஜினீயர் பெயரில் போலி கணக்கு
கோவை
பெண் என்ஜினீயர் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கிய மர்ம ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் என்ஜினீயர்
கோவையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் சென்னையில் தங்கி இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்து உள்ளார்.
இந்த நிலையில் இவருடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு உருவாக்கி, மர்ம நபர் ஒருவர், அந்த பெண்என்ஜினீயரின் புகைப்படத்தை அதில் வைத்து உள்ளார். அத்துடன் அந்த கணக்கு மூலம் என்ஜினீயரின் உறவினர்கள், நண்பர்களிடம் ஒருவர் குறுஞ்செய்தி மூலம் பேசி வந்து உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு
இது அந்த பெண் என்ஜினீயருக்கு தெரியவந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவர், அவருடைய பெயரில் போலி கணக்கு வைத்திருந்த நபருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு யார் என்பது குறித்து கேட்டறிந்தார். அதற்கு அந்த நபர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
அத்துடன் அந்த நபர், தொடர்ந்து பெண் என்ஜினீயரின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்தார். இது குறித்து அந்த பெண் என்ஜினீயர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை
பெண் என்ஜினீயர் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர், உறவினர்கள், நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினாரா? அல்லது பணம் கேட்டு மோசடி செய்தாரா என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.