தீயணைப்பு துறை சார்பில் கட்டிடங்களுக்கு போலி தடையில்லா சான்றிதழா?


தீயணைப்பு துறை சார்பில் கட்டிடங்களுக்கு போலி தடையில்லா சான்றிதழா?
x

தீயணைப்பு துறை சார்பில் கட்டிடங்களுக்கு போலி தடையில்லா சான்றிதழா? சி.பி.ஐ. விசாரணை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த நாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

18.3 மீட்டர் உயரத்துக்கு குறைவான கட்டிடங்களுக்கு அந்தந்த மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு மேல் உயரமான கட்டிடங்களுக்கு தீயணைப்புத்துறை இயக்குனரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு தடையில்லா சான்றிதழை புதுப்பிக்கக் கோரி சென்னையில் உள்ள தீயணைப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இந்த கட்டிடங்களை தீயணைப்புத்துறை உதவி இயக்குனர் தலைமையிலான குழு ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே இந்த கட்டிடங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த தடையில்லாச் சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் இந்த முறைகேட்டில் தீயணைப்புத்துறையினர் சம்பந்தப்பட்டு இருப்பதால், இந்த வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லை.

தமிழகத்தில் 18.3 மீட்டர் உயரத்துக்கும் மேல் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு இடங்களில் போலி சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளன. எனவே சி.பி.ஐ. அல்லது அதற்கு இணையான அமைப்பிடம் இந்த வழக்கு விசாரணையை மாற்றும்படி அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே எங்கள் மனுவின் அடிப்படையில் போலி தடையில்லா சான்றிதழ் வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story