போலி டாக்டர் கைது
ஜோலார்பேட்டை அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலி டாக்டர் கைது
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் ஒருவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சரின் தனி பிரிவிற்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சிவக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் அரசு மருத்துவர் செல்வநாதன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 48) என்பவர் மருத்துவம் படிக்காமல் தனது வீட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து மருத்துவத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பத்தை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தப்பி ஓட்டம்
இதே போன்று மூக்கனூர் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் மருத்துவம் படிக்காமல், அவரது வீட்டில் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக வந்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது ஆரோக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து, ஆரோக்கியராஜ் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய போலி டாக்டர் ஆரோக்கியராஜை தேடி வருகின்றனர்.