போலி டாக்டர்கள் 10 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை போலி டாக்டர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை போலி டாக்டர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போலி டாக்டர்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுப்பது, ஊசி போடுவது, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற செயல்களில் போலி டாக்டர்கள் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து போலி டாக்டர்கள் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நன்னிலம், கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.
10 பேர் கைது
அதில் நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் பகுதியில் மருந்து கடை மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நாகையை சேர்ந்த செந்தில் (வயது37), பேரளம் கொல்லுமாங்குடி பகுதியில் சிகிச்சை அளித்த நன்னிலத்தை சேர்ந்த சிவக்குமார் (56) ஆகிய போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (52), கல்யாணசுந்தரம் (62), இடும்பாவனம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (56), பெருகவாழ்ந்தான் பகுதியை சேர்ந்த சிவகுருநாதன் (72), எடையூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (55), கோட்டூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் (65), திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவை சேர்ந்த குமார் (52), சேகரை கிராமத்தை சேர்ந்த சவுரிராஜ் (38) ஆகியோரும் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.