பேராயரை அறையில் அடைத்து செல்போன்களை பறித்த போலி வருமான வரி அதிகாரிகள்
குடியாத்தத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பேராயர் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரை அறையில் அடைத்து தாக்கியது. பொதுமக்கள் திரண்டு வந்து ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பேராயர் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரை அறையில் அடைத்து தாக்கியது. பொதுமக்கள் திரண்டு வந்து ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேராயர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி பகுதியில் வசிப்பவர் டி.பி.நோவா (வயது 51). கிறிஸ்தவ சபை நடத்தி வரும் இவர் அந்த சபையின் பேராயராக உள்ளார். இவரது மனைவி செல்வராணி, சித்தா டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு மகள் 7-ம் வகுப்பு மாணவி.
பேராயர் நோவா நடத்தும் கிறிஸ்தவ சபை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் வீட்டில் நோவா அவரது மனைவி டாக்டர் செல்வராணி ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மகள்கள் மாடியில் இருந்தனர்.
8 பேர் கும்பல்
அப்போது 2 கார்களில் வந்த 8 பேர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தன்னை பார்க்கத் தான் வந்துள்ளனர் என நினைத்த பேராயர் நோவா யார் நீங்கள்? என்ன விஷயம் என விசாரித்துள்ளார்.
அப்போது நாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள். உங்கள் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக பணம் மற்றும் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் உள்ளதாக தகவல் வந்துள்ளதால் சோதனையிட வந்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் நோவா குடும்பத்தினரின் 5 செல்போன்களை பறித்துக் கொண்டுள்ளனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த நோவா அவர்களிடம் விசாரிக்க முயல்வதற்குள் அவரது மனைவியை ஒரு சோபாவில் அமர வைத்து மிரட்டும் தொணியில் பேசினர். அடுத்த வினாடியே நோவாவை சரமாரியாக தாக்கி ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.
மேலும் அவர்கள் வீட்டின் வெளிக் கதவையும் பூட்டினர். இதனால் பயந்து போன நோவா, அறையில் உள்ள ஜன்னலில் நின்றபடி கூச்சலிடவே அக்கம் பக்கத்து பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர்.
தப்பி ஓட்டம்
அதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்து தாங்கள் வந்த கார்களில் ஏறி தப்பினர். அதில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் பிடித்தனர்.
பின்னர் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து தாக்க தொடங்கினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை மீட்டனர். பின்னர் நோவா மற்றும் உறவினர், பிடிப்பட்ட நபரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பேராயர் நோவா மற்றும் அவரது உறவினர் ராஜ்குமார் ஆகியோரிடம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நபர் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் சுரேஷ் (38) என்பது தெரியவந்தது.
இந்த கும்பலுக்கு தலைவனாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் இருந்துள்ளார். அவர்தான் இந்த கும்பலை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
திட்டமிட்டு புகுந்துள்ளனர்
கடந்த சில தினங்களாக பேராயர் நோவா வீட்டை இவர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர். எப்போதும் இவரது வீட்டில் யாராவது ஆட்கள் அமர்ந்திருப்பர். நேற்று மாலை யாரும் இல்லாத சமயத்தில் திடீர் என வீட்டில் திட்டமிட்டு புகுந்து வருமான வரி துறையினர் என மிரட்டி உள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவத்தால் பயந்து போன பேராயர் மற்றும் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வந்தவர்கள் கத்தி வைத்திருந்ததாகவும் தன்னை தாக்கி அறையில் அடைத்ததால் தனது குடும்பத்தினர் பயத்தில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
இதனிடையே வேலூர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். போலி வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த இரண்டு கார்களின் நம்பர் குறித்தும் அவர்களின் அடையாளம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.