'கரூரில் தயாராகும் போலி மதுபானம் டாஸ்மாக் கடைகளில் விற்பனை'
கரூரில் தயாராகும் போலி மதுபானம் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது என்று திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கள்ளச்சாராய சாவு மற்றும் போலி மதுபானங்களால் ஏற்படும் இறப்பை தடுக்க வேண்டும், கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
கள்ளச்சாராய விற்பனை
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த நிலையிலும், தர்மத்தின் ஆட்சி நடப்பதாக கூறுகின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பு விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த நபர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
ஆனால் மதுரை சித்திரை திருவிழாவில் நெரிசலில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. இந்த ஆட்சி எதை நோக்கி செல்கிறது என்று மக்கள் சிந்திக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறினா். இதுவரை மதுக்கடைகளை மூடவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.
கரூர் போலி மதுபானம்
தி.மு.க. ஆட்சியில் 90 சதவீத மதுபான பார்கள் உரிமம் இல்லாமல் நடத்தப்படுகிறது. டாஸ்மாக் மதுக்கடை மூடினாலும் விடிய, விடிய தெருக்களில் மதுபான விற்பனை நடக்கிறது. மேலும் கரூரில் தயாரான போலி மதுபானம் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படுகிறது என்று கவர்னரிடம், எடப்பாடி பழனிசாமி புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். உரிமம் இல்லாத பார்கள் மூடப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் உரிமம் இல்லாத மதுபார்களை மூடிவிட்டு, மாலையில் திறப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தி.மு.க. நிர்வாகிகளே சட்டவிரோதமாக மதுபானம் விற்கின்றனர். பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு மதுபான விற்பனை நடக்கிறது. இதுதவிர போதை பொருட்களின் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.
மின்வெட்டு
அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை, கள்ளச்சாராய சாவு முற்றிலும் இல்லை. கொரோனா காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டபோது கூட கள்ளச்சாராயம் விற்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவு நடந்துள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்படுகிறது. அதற்கு மின்வெட்டு வேறு, மின்தட்டுப்பாடு வேறு அமைச்சர் கூறுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி, மின்மிகை மாநிலமாக திகழ்ந்தது.
நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பானுக்கு சென்றுள்ளார். 7 கோடி தமிழக மக்களின் தலைவனாக வந்து இருக்கிறேன் என்று கூறுகிறார். தமிழ் பேசும் சிங்கப்பூரில் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி என்கிறார்.
நாடாளுமன்றத்தில் இதுவரை தமிழ் ஒலித்ததே இல்லை. நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழில் தேவாரம் ஓதப்பட்டு செங்கோல் நிறுவப்பட்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறளை குறிப்பிட்டு, தமிழை பெருமைப்படுத்துகிறார்.
நாடகமாடும் முதல்-அமைச்சர்
முதல்-அமைச்சருக்கு தமிழ் ரத்தம் ஓடினால் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று இருக்க வேண்டாமா?. ஆனால் விழாவில் பங்கேற்க கூடாது என்பதற்காக திட்டமிட்டு வெளிநாட்டில் இருப்பது போன்று நாடகம் ஆடுகிறார். நடுநிலையாளர்கள் அனைவரும் பிரதமரை பாராட்டுகின்றனர்.
தமிழ், தமிழ் என்று கூறிவிட்டு தமிழர்களுக்கு மு.க.ஸ்டாலின் துரோகம் செய்கிறார். தி.மு.க ஆட்சி முடியும் நாள் தான் தமிழகத்தில் நிம்மதி என்று மக்கள் கூறுகின்றனர். மத்திய அரசு வழங்கும் ரேஷன்அரிசியின் அளவை குறைத்து, தி.மு.க. அரசு மக்களுக்கு வழங்குகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் வேடசந்தூர், நத்தம், திண்டுக்கல் என அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் கொண்டு வரப்பட்டது. ஆனால் தி.மு.க. தற்போது அடிக்கல் நாட்டு விழா நடத்துகிறது. தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் எழுச்சியுடன் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிர்வாகிகள்
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பி.கே.டி.நடராஜன், பிரேம்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சீ.ராஜ்மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், வக்கீல் அணி நிர்வாகிகள் ஜெயபால், பழனிச்சாமி, மனோகரன், ராஜேஷ் கண்ணா, எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் திவான்பாட்சா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.