அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் போலி பட்டியல் வணிகம் ஒழிக்கப்படும் -அமைச்சர் மூர்த்தி உறுதி
தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் போலி பட்டியல் வணிகம் ஒழிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது ரூ.95 ஆயிரத்து 209 கோடியாக இருந்த வணிக வரித்துறையின் வருவாய் 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 970 கோடியாக உயர்ந்தது. 2022-23-ம் நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 540 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டின் வளர்ச்சி 27.22 சதவீதம் ஆகும். இந்த வளர்ச்சிக்கு காரணம். வணிக வரித்துறை அலுவலர்கள் மேற்கொண்ட தொடர் தணிக்கை, நமூனா கூர்ந்தாய்வு, நிலுவை வரி வசூல், நுண்ணறிவு பிரிவின் திடீராய்வு, சுற்றும் படைகளின் சரக்கு வாகன கண்காணிப்பு மற்றும் போலி வணிக பட்டியல் தயாரிப்பதை தடுத்தல் போன்ற தொடர் நடவடிக்கைகளே ஆகும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது ரூ.10 ஆயிரத்து 643 கோடியாக இருந்த பத்திரப்பதிவு துறையின் வருவாய் 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.13 ஆயிரத்து 913 கோடியாக உயர்ந்தது. 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.17 ஆயிரத்து 296 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் பதிவுத்துறையின் வளர்ச்சி 24.3 சதவீதம் ஆகும்.
போலி பட்டியல் வணிகம்
போலி பட்டியல் வணிகம் என்பது வணிக வரித்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. போலி பட்டியல் வணிகத்தால் அரசுக்கு பெரும் வருவாயில் இழப்பு ஏற்படுவதோடு நேர்மையாக வணிகம் செய்து வரி செலுத்தும் வணிகர்களின் மன உறுதியையும் அது குலைக்கிறது. இதனால் தீவிர நடவடிக்கை எடுத்து போலி பட்டியல் வணிகத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உறுதி பூண்டுள்ளது.
வணிக வரித்துறையில் தரம் உயர்த்தப்பட்ட 1,000 பணியிடங்களில் 840 பேர் துணை வணிக வரி அலுவலர்களாகவும், 160 பேர் வணிக வரி அலுவலர்களாகவும் விரைவில் பதவி உயர்வு பெற உள்ளனர். இதனால் வரி நிர்வாகம் மேம்படும். அரசுக்கு வரும் வருவாய் உயரும்.
பதிவுத்துறையில் தி.மு.க. அரசால் மேற்கொள்ளப்பட்டு உள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் மற்ற மாநில அரசுகளை தமிழ்நாட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளன.
தாம்பரம் புதிய மண்டலம்
சென்னை பதிவு மண்டலத்தை பிரித்து சென்னை தெற்கு என்ற புதிய பதிவு மண்டலம் விரைவில் உருவாக்க நடவடிக்கையில் உள்ளது. தற்போது பெரிய பதிவு மாவட்டங்களான தென்சென்னை, கோவை ஆகியவற்றை பிரித்து முறையே தாம்பரம், கோவை தெற்கு ஆகிய புதிய பதிவு மாவட்டங்கள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன.
சேலம் கிழக்கு, கோபிச்செட்டிப்பாளையம், காரைக்குடி, தாம்பரம், கோவை தெற்கு ஆகிய பதிவு மாவட்டங்களில் புதிய தணிக்கை அலகுகள் ஏற்படுத்த அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன. பொதுமக்கள் மற்றும் பதிவு அலுவலர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் இணையதள சேவைகள் வழங்குவதற்காக 'ஸ்டார் 3.0' எனும் மென்பொருள் ரூ.325 கோடி செலவில் உருவாக்கப்படும்.
வடசென்னை பதிவு மாவட்டத்தில் கொளத்தூரில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.