திருவாவடுதுறை ஆதீனம் பெயரில், சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் பதிவு போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் சமூக வலைதளங்களில் போலி தகவல்களை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் சமூக வலைதளங்களில் போலி தகவல்களை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதீனம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் உள்பட தமிழகத்தை சேர்ந்த பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் திருவாவடுதுறை ஆதீனம் கூறியதாக ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில் பிரதமர் நரேந்திரமோடி, திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் செங்கோல் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
சமூக வலைதள பதிவு
அந்த பதிவில், 'ஆட்சியாளர்கள் கையில் செங்கோலை ஒப்படைத்த ஒரு மண்டலத்துக்குள் விபத்தின் காரணமாக துர்மரணங்கள் நிகழ்வது நல்லதல்ல. இது தவறானவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என கடவுள் கொடுக்கும் நிமித்த சேதியாக கூட இருக்கலாம்' என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் அதில் தனியார் தொலைக்காட்சி லோகோவும் இடம் பெற்றிருந்தது. இந்த பதிவு வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
இதுகுறித்து ஆதீன பொதுமேலாளர் ராஜேந்திரன், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம் புகார் மனு அளித்தார்.
அதில், 'திருவாவடுதுறை ஆதீனத்துக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் இதுபோன்ற போலி தகவலை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு மதமோதலை உண்டாக்கும் வகையில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொய் செய்தியை பரப்பிய மர்ம நபர்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவிய நிகழ்வில் ஆதீனங்கள் பங்கேற்றது குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவிவந்தன.
இந்த நிலையில் ரெயில் விபத்து குறித்து ஆதீனம் கூறியதாக தவறான செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.