திருமங்கலத்தில் 10-ம் வகுப்பு மாணவனை மிரட்டி செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது
திருமங்கலத்தில் 10-ம் வகுப்பு மாணவனை மிரட்டி செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் 10-ம் வகுப்பு மாணவனை மிரட்டி செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
10-ம் வகுப்பு மாணவர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மகன் நவீன்பிரபு (வயது 15). திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ஜெராக்ஸ் எடுக்க திருமங்கலம் கோர்ட் ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அங்கு ஜெராக்ஸ் எடுத்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது அங்கு போலீஸ் சீருடையில் வந்த ஒருவர் நவீன்பிரபுவை நிறுத்தி, மிரட்டும் தொனியில் விசாரித்துள்ளார்.
செல்போன் பறிப்பு
பின்னர் உன் செல்போனை எடு, உனது தந்தையிடம் பேச வேண்டும் என கேட்டு மாணவனிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு, போலீஸ் நிலையத்துக்கு வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
நவீன்பிரபு இது குறித்து தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று செல்போனை கேட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த போலீஸ்காரர்கள், நாங்கள் யாரும் மாணவனிடம் இருந்து செல்போனை வாங்கவில்லை என கூறினர். அப்போதுதான் போலீஸ் உடையில் வந்த வாலிபர், செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.
போலி போலீஸ்காரர் கைது
இது தொடர்பாக நவீன்பிரபுவின் தாய் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது போலீஸ் சீருடையில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் மடக்கி விசாரித்தனர். அதில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏரிக்கொடி பகுதியை சேர்ந்த விக்னேசுவரன் (24) என்பதும், போலீஸ்காரர் போல நடித்து மாணவனை மிரட்டி செல்போன் பறித்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை உத்தங்குடி வளர்நகரை சேர்ந்த மந்தைசாமி மகன் நாகராஜ்(20). இவர் மேலூர் மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது அங்கு போலீஸ் உடையில் வந்த வாலிபர், திடீரென நாகராஜின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆவணங்கள் இருக்கிறதா? எங்கிருந்து வருகிறாய்? என கேட்டு அவரது செல்போனை பறித்தார்.
பின்னர் நாகராஜின் கவனத்தை திருப்பி, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் இதுகுறித்து தனது தந்தையிடம் கூறினார். பின்னர் இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்தார். கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து, தப்பிச்சென்ற அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற போது சிக்கினார்
மதுரை சமயநல்லூர் தேனூர் வைகைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவன் நிவாஸ்(20). இவர் எல்.ஐ.சி. முகவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சமயநல்லூர் 4 வழிசாலையில் வைகை ரோடு ஜங்ஷன் பகுதியில் நின்று தனது நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தார்.
அப்போது அங்கு போலீஸ் சீருடையில் வந்த விக்னேசுவரன், ஜீவன் நிவாசிடம் உனது மோட்டார்சைக்கிள் நன்றாக இருக்கிறது. சிறிதுதூரம் ஓட்டி பார்க்கலாமா? என கேட்டுள்ளார். அவரை போலீஸ்காரர் என நம்பிய ஜீவன் நிவாஸ், மோட்டார்சைக்கிளை கொடுத்தார். இதையடுத்து விக்னேசுவரன் மோட்டார்சைக்கிளுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
மோட்டார் சைக்கிளை பறிகொடுத்தது குறித்து ஜீவன் நிவாஸ் புகாரின்ே்பரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசுவரனை தேடி வந்தனர். இந்நிலையில்தான் திருமங்கலத்தில் போலீசாரின் வாகன சோதனையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அவர் பிடிபட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.