மோட்டார் சைக்கிள் திருடிய போலி போலீஸ்காரர் மதுரையில் சிக்கினார்
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய போலி போலீஸ்காரர் மதுரையில் சிக்கினார். அவர் சிறுவனை மிரட்டி செல்போனை பறித்ததும் தெரிய வந்துள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய போலி போலீஸ்காரர் மதுரையில் சிக்கினார். அவர் சிறுவனை மிரட்டி செல்போனை பறித்ததும் தெரிய வந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் திருட்டு
நாகர்கோவில் தெற்கு திருப்பதிசாரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பெர்னாட். இவர் நாகர்கோவில்-நெல்லை 4 வழி சாலையில் திருப்பதிசாரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு பெர்னாட் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது போலீஸ் சீருடை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தினார்.
பின்னர் தனது மேட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்ததால் பெட்ரோல் வாங்கி வருவதாக கூறி பெர்னாட்டின் மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெர்னாட் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருட்டு மோட்டார் சைக்கிள்
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெர்னாட் கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பழுதானதால் பெர்னாட்டின் மோட்டார் சைக்கிளை நைசாக பேசி வாங்கி, திருடிச் சென்று இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் சிக்கினார்
இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கீழ உரப்பனூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது போலீஸ் உடையில் வந்த மர்ம நபர் மாணவரை தடுத்து நிறுத்தி மிரட்டும்படி பேசியுள்ளார். மேலும் மாணவரின் செல்போனை பறித்துக் கொண்டு திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் வந்து செல்போனை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாணவர் தனது பெற்றோருடன் போலீஸ் நிலையம் சென்று செல்போனை கேட்டார். அப்போது மாணவரிடம் செல்போன் பறித்து சென்றது போலியான போலீஸ் என்பது தெரியவந்தது. நாகர்கோவிலில் போலீஸ் என கூறி மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதுபோல் இங்கு மாணவரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளார்.
வேறு வழக்குகள்?
இதற்கிடையே நேற்று அதிகாலையில் திருமங்கலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏரிக்கொடி பகுதியை சேர்ந்த விக்னேசுவரன் (24) என்பதும், போலீஸ் என கூறி மாணவரிடம் செல்போனை பறித்து சென்றது தெரிய வந்தது. மேலும் நாகர்கோவிலில் போலீஸ் சீருடையில் வந்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதும் விக்னேசுவரன்தான் என்பதையும் போலீசார் தெரிந்து கொண்டனர். இதுகுறித்து குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விஷ்னேசுவரன் தேனூர் வைகைநகரை சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை திருடி விட்டு தப்பி செல்லும் போதுதான் போலீசில் சிக்கியுள்ளார். இவர் மீது வேறு வழக்குகள் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.