போலி சாமியாரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
மத்தூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் பணம் பறித்த போலி சாமியாரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
மத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் ஊராட்சிக்கு அருகில் உள்ள நரவந்தம்பட்டியை சேர்ந்தவர் நளினி (வயது47). தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47). இவர் நளினியை தொடர்பு கொண்டு தான் ஒரு சாமியார் எனவும் வீட்டில் செய்வினை இருப்பதாக கூறியும், பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பணம் பறித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் செல்வம் கூறியபடி எதுவும் நடக்கவில்லை என்பதால் தான் கொடுத்த பணத்தை நளினியிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் தலைமறைவான செல்வம் மீண்டும் பணம் கொடுத்தால் பரிகார பூஜைகள் செய்து பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி மத்தூர் பஸ் நிலையம் அருகில் பணத்துடன் வருமாறு நளினியிடம் கூறினார். இதையடுத்து நளினி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மத்தூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த செல்வத்தை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி சாமியார் என தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.