கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன் கைது  போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x

பரபரப்பு தகவல்

ஈரோடு

ஈரோடு அருேக கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல்

ஈரோடு அருகே உள்ள சித்தோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவருடைய மனைவி வளர்மதி. இவர்களுடைய மகள் பிருந்தா (வயது 23). இவர் பி.காம் சி.ஏ. படித்து உள்ளார்.

ஈரோடு வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கார்த்தி (24). கட்டிட ஒப்பந்ததாரர்.

கல்லூரிக்கு படிக்க செல்லும்போது கார்த்திக்கும், பிருந்தாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு பெற்றோர்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் எதிர்ப்பையும் மீறி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பிருந்தாவின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து பிருந்தா தனது தாய் வீட்டிலேயே தனது காதல் கணவர் கார்த்தியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் பிருந்தா இறந்து கிடந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து பிருந்தா கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

கழுத்தை நெரித்து கொலை

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் நடத்திய விசாரணையில் பிருந்தாவுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அரவிந்தை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிருந்தாவை அரவிந்த கழுத்தை நெரித்ததையும், இதில் அவர் மூச்சுத்திணறி இறந்ததையும் ஒப்புக்்கொண்டார்.

பரபரப்பு தகவல்கள்

அரவிந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

திண்டுக்கல்லை சேர்ந்த அரவிந்த் (21) என்பவர் ஓட்டல் மேலாண்ைம படித்துவிட்டு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வந்து உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த் அடிக்கடி சித்தோடு ெநசவாளர் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தோழிகள் மூலம் பிருந்தாவுக்கும், அரவிந்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இந்த அறிமுகம் நட்பாக உருவாகி காலப்போக்கில் காதலாகவும் மாறி உள்ளது. ஏற்கனவே கார்த்தியுடன் குடும்பம் நடத்தி வந்தாலும் அரவிந்த்துடனும் பிருந்தாவுக்கு காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு வந்தார்

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அரவிந்த் வேலை செய்து வந்ததால், அவரால் தொடர்ந்து பிருந்தாவை பார்க்க வரமுடியவில்லை. இந்தநிலையில் கார்த்தி் கட்டுமான தொழில் விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். பிருந்தாவின் தாய் மற்றும் தந்தை 2 பேரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவருடைய அக்காள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

இதை தெரிந்து கொண்ட அரவிந்த் கடந்த 27-ந் தேதி பிருந்தாவின் வீட்டுக்கு வந்து உள்ளார்.

மறுப்பு

அப்போது அரவிந்த் உன்னை பிரிந்து என்னால் உயிர் வாழ முடியாது. எனவே 2 பேரும் இங்கிருந்து ஓடிவிடலாம் என கூறியதாக தெரிகிறது. ஆனால் பிருந்தா நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். மேலும் வேறொருவருக்கு மனைவியாக வாழ்ந்து வருகிறேன். எனவே என்னால் வரமுடியாது என்று மறுத்து உள்ளார். இதனால் நாம் தற்கொலை செய்து கொள்ளலாமா? என பிருந்தாவிடம் அரவிந்த் கேட்டு உள்ளார்.

நான் தற்கொலை செய்ய முடியாது. வேண்டுமானால் என்னை கொலை செய்துவிட்டு நீங்கள் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என பிருந்தா கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து பிருந்தாவின் கழுத்தை அரவிந்த் விளையாட்டாக நெரித்தபோது எதிர்பாராத விதமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிருந்தா உயிர் இழந்தார்.

கைது

இதனால் செய்வதறியாது திகைத்த அரவிந்த், பிருந்தாவுக்கு தீபாவளி பண்டிகைக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்த பரிசு பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்னைக்கு தப்பி ஓடியுள்ளார்.

இந்தநிலையில்தான் தனிப்படை போலீசார் சென்னை சென்று அரவிந்த்தை கைது செய்து ஈரோடு அழைத்து வந்தனர். பின்னர் அவர் ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story