பீட்ரூட் கொள்முதல் விலை வீழ்ச்சி
கோத்தகிரி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
காய்கறி சாகுபடி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
இதேபோல் சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகிறார்கள். கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கூக்கல், கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, ஈளாடா, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பரப்பளவில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பீட்ரூட் பயிரிட்டு உள்ளனர்.
விலை வீழ்ச்சி
மேலும் தங்களது விளைநிலங்களில் விளைந்த பீட்ரூட்களை விற்பனை செய்வதற்காக அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளில் தற்போது பீட்ரூட் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனால் அதை பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்ரூட் கிலோவுக்கு ரூ.70-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் சில மாதங்களாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.24-க்கு கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் பீட்ரூட் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.