கம்பம் பகுதியில் மாங்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை


கம்பம் பகுதியில் மாங்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 13 July 2023 2:30 AM IST (Updated: 13 July 2023 5:48 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி

கம்பத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான ஏகலூத்து சாலை, கம்பம்மெட்டு சாலை, புதுக்குளம் சாலை, மணிகட்டி ஆலமரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் செந்தூரம், கல்லாமை, இமாம்பசந்த், அல்போன்சா, காளபாடி, பங்கனபள்ளி மற்றும் நாட்டு மா வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் மாங்காய் சுவை மிகுந்ததால் வெளிமாநில வியாபாரிகள் கம்பம் பகுதிக்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

கம்பம் பகுதியில் நடப்பாண்டில் மா மகசூல் அதிகரித்தது. ஆனால் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேநேரத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மா மரங்களின் இலையில் உள்ள கரைகளுடன் சேர்ந்து மழைநீர் பழத்தில் வடிந்தது. இதனால் மாங்காயில் கருப்பு நிறத்தில் சாரை படிந்து, நிறம் குறைந்தது. இதனால் வியாபாரிகளும் மாங்காய்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "கடந்த சில ஆண்டுகளாக மாங்காய்க்கு போதிய விலை கிடைத்தது. தற்போது இடைத்தரகர்கள் தலையீட்டால் போதிய விலை கிடைக்கவில்லை. எனவே நெல்லுக்கு அரசு கொள்முதல் நிலையம் இருப்பதுபோல், மாங்காய்களுக்கும் அரசு கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story