முள்ளங்கி விலை வீழ்ச்சி
ஓசூர் பகுதிகளில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் முள்ளங்கியை சாலையோரம் கொட்டி சென்றனர்.
ஓசூர்
ஓசூர் பகுதிகளில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் முள்ளங்கியை சாலையோரம் கொட்டி சென்றனர்.
முள்ளங்கி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூர், பேரிகை ஆகிய பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி, அவரை, முள்ளங்கி, கேரட், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இங்குள்ள தட்பவெப்ப நிலை காரணமாக விளைச்சல் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே முள்ளங்கி அதிகப்படியாக விளைந்து மகசூலை எட்டியுள்ளது. இதன் காரணமாக காய்கறி சந்தைகளுக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சாலையோரம் கொட்டும் நிலை
மேலும் அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு வரக்கூடிய கூலி செலவு கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அறுவடை செய்த முள்ளங்கியை மூட்டை, மூட்டையோக சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஓசூர் பகுதியில் முள்ளங்கி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் முள்ளங்கியை சாலையோரம் மூட்டை, மூட்டையாக போட்டு செல்கின்றனர் என்று கவலையுடன் தெரிவித்தனர்.