மாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்தில் முறிந்து விழுந்த கொடிமரம்
மாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்தின்போது கொடிமரம் முறிந்து விழுந்ததால், பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் பிரசித்தி பெற்ற உடல்மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 5-ந்தேதி சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பிரமோற்சவ கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி கோவில் முன்பு உள்ள சுமார் 20 அடி உயரம் உள்ள கொடிமரத்தில் கோவில் பூசாரி, கொடியேற்றி தொடங்கினார். அப்போது திடீரென கொடிமரத்தின் உச்சி வரை ஏற்றப்பட்டபோது திடீரென கொடிமரம் பாதியில் முறிந்து விழுந்தது. இதனால் சுற்றிநின்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வைரலான வீடியோ
இதன் பின்னர், மூங்கிலில் கம்பால் ஆன, தற்காலிக கொடிமரம் அங்கு அமைக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு பிறகு பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதற்கிடையே பிரமோற்சவ கொடியேற்றத்தின்போது கொடிமரம் முறிந்து விழுந்தது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.