வடமாநில வாலிபரை காதலித்து திருமணம்: வீட்டில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்ட பெருந்துறை பெண் குழந்தையுடன் மீட்பு
சித்ரவதை செய்யப்பட்ட பெருந்துறை பெண் குழந்தையுடன் மீட்பு
வடமாநில வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொல்கத்தா சென்ற பெருந்துறை பெண் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டார். அவரை குழந்தையுடன் பெருந்துறை போலீசார் மீட்டனர்.
காதல் திருமணம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பாலக்கரையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சுபத்ரா (வயது 23). மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சுப்ரதாஸ் (27). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கரை பகுதிக்கு வந்து அங்குள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது சுபத்ராவுக்கும், சுப்ரதாசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் சுபத்ரா அந்த வாலிபருடன் கொல்கத்தாவிற்கு சென்று, அவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து, அந்த பெண் தனது பெற்றோருக்கு போன் செய்து, தான் காதல் திருமணம் செய்து கொண்டு கணவருடன் கொல்கத்தாவில் வசித்து வருவதாக தகவல் கூறியுள்ளார். இதனால், சுபத்ராவை தேடும் முயற்சியை அவரது பெற்றோர் கைவிட்டனர். பின்னர் சுபத்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சித்ரவதை
இந்த நிலையில், 'கடந்த சில நாட்களாக தான் கொல்கத்தாவில் உள்ள சுப்ரதாஸ் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், தினந்தோறும் தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், அவருடைய சித்ரவதையில் இருந்து தன்னையும், தனது 2 வயது மகனையும் காப்பாற்ற வேண்டும் என்றும்,' சுபத்ரா யூ டியூப் சமூக வலைதளம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகியது.
பெண் மீட்பு
இதுபற்றி அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகத்தை தொடர்பு கொண்டு, வீட்டில் அடைக்கப்பட்டு உள்ள சுமித்ராவை கொல்கத்தாவில் இருந்து மீட்டு பெருந்துறைக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
அதன் பேரில் சுமித்ராவை மீட்டு வருவதற்காக பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்- இன்ஸ்பெக்டர் சந்தானம் தலைமையிலான தனிப்படை போலீசார் கொல்கத்தாவுக்கு விரைந்தனர். சுபத்ராவின் பெற்றோரும் உடன் சென்றனர்.
கொல்கத்தா சென்ற போலீசார், அங்குள்ள புர்பா பர்த்தமான் மாவட்டத்தைச் சேர்ந்த மோங்கல் கோட் போலீஸ் நிலைய அதிகாரியை சந்தித்து, சுபத்ராவை மீட்டுச் செல்ல உதவுமாறு கேட்டனர். அதைத்தொடர்ந்து மோங்கல் கோட் போலீசார் உதவியுடன் சுபத்ராவையும், அவருடைய குழந்தையையும் பெருந்துறை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை ரெயில் மூலம் ஈரோட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.