திருக்கல்யாண நிகழ்ச்சியில் மிருதங்கம் வாசித்து அசத்திய 3 வயது சிறுவன்
திருக்கல்யாண நிகழ்ச்சியில் மிருதங்கம் வாசித்து 3 வயது சிறுவன் அசத்தினான்.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமி நீளா, பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரத விநாயகர், செல்வ விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. காலம்காலமாக இக்கோவிலில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சேந்தமங்கலம் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கோவிலை புதுப்பிக்க முடிவெடுத்தனர். இதையடுத்து பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக கோவில் முன்பு பூமி நீளா, பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் என மூன்று சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினர்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருமாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூமி நீளா, பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று கோஷம் எழுப்பினர்.
சிறுவர்கள், பெரியவர்கள் உள்பட பக்தர்கள் பெருமாள் பக்தி பாடல்களை பாடினர். இதில் புதுக்கோட்டையை சேர்ந்த சாய்சிவா என்ற 3 வயது சிறுவன், சிறுவர்களுடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்து அசத்தினான். இதை அங்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் சிறுவனை அவர்கள் பாராட்டி சென்றனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.