கும்பாபிஷேக விழாவை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்! ஆச்சிரியத்தில் சொந்த கிராம மக்கள்


கும்பாபிஷேக விழாவை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்! ஆச்சிரியத்தில் சொந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 14 Jun 2022 6:32 AM GMT (Updated: 14 Jun 2022 7:42 AM GMT)

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை காண குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை கண்ட கிராம மக்கள் ஆர்வத்துடனும் பார்த்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டியில் குடியேறினார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகின்றனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார்.

நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு அதிகம். அவற்றில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரது நீண்ட கால ஆசை. அதேபோல நடராஜனின் மகன் மோகித்துக்கும் தந்தையை போல ஆசை இருந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது கோவில்பட்டி அருகே உள்ள அவர்களது தீத்தாம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி,தெய்வானை திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தத் திருவிழாவை காண பாலசுப்பிரமணியன் தனது மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கும்பாபிஷேக விழாவிற்கு செல்ல தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்தார். அதன்படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவல்லி மற்றும் மகன், பேரன், மற்றும் உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் மூங்கில் கூடையில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு திப்பம்பட்டி வந்தனர்.

சொந்த ஊருக்கு ஹெலிகாப்டரில் வந்தவர்கள் இரண்டு முறை அந்த ஊரை சுற்றி வந்தனர். இதை கண்ட கிராம மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் பார்த்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அங்கு கூடிய மக்கள் சிலர் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதில் சிலர் ஹெலிகாப்டரில் ஏறி ஒரு ரவுண்ட் சென்று வந்தனர். பின்னர் அதே ஹெலிகாப்டரில் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் ஊருக்கு திரும்பினர்.


Next Story