மன்னார்குடி தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை
மன்னார்குடி தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள 29.மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது55). தொழிலாளி. இவருடைய மனைவி பானுமதி. இவர்களுக்கு விஜயேந்திரன், விஜயப்பிரகாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வறுமை காரணமாக வீரமணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த வீரமணி நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்ததாக மேலநெம்மேலி கிராமத்தில் உள்ள அவருடைய உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை அறிந்த வீரமணியின் மனைவி பானுமதி, மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மலேசிய நாட்டில் உயிரிழந்த வீரமணியின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அவருடைய மனைவி மற்றும் மகன்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி அங்கேயே இறந்தது அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.