நாகர்கோவிலில் பிரபல ரவுடிக்கு 7 ஆண்டு சிறை
வாகன சோதனையின்போது போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நாகர்கோவில்:
வாகன சோதனையின்போது போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பிரபல ரவுடி
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்ற வெள்ளை செந்தில் (வயது 44). தற்போது இவர் சென்னையில் வசித்து வந்தார்.
இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் வாகன சோதனையின் போது வெள்ளை செந்திலை வழிமறித்து சோதனை செய்த போது இருசக்கர வாகன பெட்ரோல் டேங்க் கவரில் 2 கைத்துப்பாக்கிகள் இருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
7 ஆண்டு சிறை
அப்போது அவர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் போலீசார் அவர் மீது அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து காயம் ஏற்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, தகாத வார்த்தைகள் பேசியது என 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் நாகர்கோவிலில் உள்ள 2-வது கூடுதல் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி அசன்முகமது விசாரணை நடத்தி வந்தார். அவர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அப்போது வெள்ளை செந்திலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,700 அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்மூர்த்தி ஆஜராகி வாதாடினார்.
8 பிடிவாரண்டு
தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளை செந்தில் மீது ஏற்கனவே 8 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்தன. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் சென்னையில் பதுங்கியிருந்த வெள்ளை செந்திலை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்திருந்தனர்.
இந்தநிலையில் தான் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவருக்கு தற்போது 7 வருடம் சிறை தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.