விவசாய பணிகள் மும்முரம்


விவசாய பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

தொடர்ந்து பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழை

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்து வரும் மழையை பயன்படுத்தி கண்மாய்களில் நிரம்பும் தண்ணீரை சேமித்து அதன் மூலம் கிராமப்புறங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். கடந்தாண்டும், இந்தாண்டும் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பல்வேறு கண்மாய்கள் நிரம்பியும், சில கண்மாய்கள் நிரம்பி மறுகால் சென்ற வண்ணம் உள்ளது.

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் வயல்களில் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர், பிரான்மலை, காரைக்குடி, கல்லல், சிவகங்கை சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பல்வேறு விவசாயிகள் கண்மாய் பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாற்று நடும் பணி

சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை, எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிழவயல், முசுண்டப்பட்டி, ஓடுவன்பட்டி, இரணிபட்டி, ஓசாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக இங்குள்ள கண்மாய்களும், பாசன கிணறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அதை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி டிராக்டர் மூலமும், மாடுகளை கொண்டும் உழவு பணிகள் மேற்கொண்டு குறுகிய கால விளைச்சல் தரும் நெல்விதைகளை பயிரிட்டு நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நெல், உரம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக தற்போது பலத்த மழை பெய்துள்ளதால் வரும் பருவ மழை காலத்தில் மழை அளவு அதிகமாக இருக்கும். அப்போது இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்படும். அதற்கு முன்பாகவே தற்போதுள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம்.

நெல் விதை, உரம் உள்ளிட்டவைகளின் விலை அதிகமாக உள்ளதால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. நெல் நடவு பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

இதையெல்லாம் சமாளிப்பதற்காக 90 முதல் 120 நாட்கள் வரை காலக்கட்டத்தில் அறுவடை தரும் வகையில் குறுகிய கால நெல் பயிர்களை பயிரிட்டு வருகிறோம். மாவட்டம் முழுவதும் இன்னும் சில நாட்களில் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட உள்ளதால் உரம் மற்றும் நெல்விதைகளை தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.



Next Story