வீதியில் பேப்பர் சேகரிக்கும் பெண்ணை தாக்கிய விவசாயி கைது
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வீதியில் பேப்பர் சேகரிக்கும் பெண்ணை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வீதியில் பேப்பர் சேகரிக்கும் பெண்ணை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
பெண் மீது தாக்குதல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி போதும்பொண்ணு (வயது22), இவர் சாலையோரம் கிடக்கும் பழைய பாட்டில்கள் மற்றும் பேப்பர்களை சேகரித்து கடையில் விற்பனை செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குறிச்சி பகுதியில் சாலையோரம் கிடந்த பாட்டில்கள் மற்றும் பழைய பேப்பர்களை போதும்பொண்ணு சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயியான, சாமிநாதன் (வயது55) என்பவர் போதும்பொண்ணுவிடம் இருந்த சாக்கு பையினை பிடுங்கி அதில் இருந்த பொருட்களை கீழே கொட்டி, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
விவசாயி கைது
இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சாந்தலிங்கம் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.