இளம்பெண்ணை தாக்கிய விவசாயி கைது
கே.வி.குப்பம் அருகே இளம்பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
கே.வி.குப்பத்தை அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50) விவசாயி. இவருடைய நிலத்தின் பக்கத்து நிலத்தை சேர்ந்த பிரதாப் மனைவி சந்தியா (23). இவர்களுக்கு இடையே நீண்ட காலமாக பொதுவழி தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் பொதுவழியில் இருந்த முருங்கை மரத்தில் சந்தியா தனது தாயாருடன் முருங்கைக் கீரை பறித்துள்ளார். இதனால் வெங்கடேசனுக்கும் சந்தியாவிற்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் அருகில் கிடந்த கட்டையால் சந்தியாவின் தலைமீது தாக்கியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சந்தியாவை, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் சந்தியா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தார்.