விஷம் தின்று விவசாயி தற்கொலை முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விஷத்தை தின்று விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஷம் தின்ற விவசாயி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் ஒருவர் வாந்தி எடுத்தார். மேலும் அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அந்த நபர் விஷத்தை தின்றது தெரியவந்தது.
இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ஏட்டு சுரேஷ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் பழனி காந்திநகரை சேர்ந்த விவசாயி அழகர் (வயது 46) என்பது தெரியவந்தது.
பணம்-பத்திரம் மாயம்
மேலும் அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மனைவி கோகிலா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் எனது மகன், மகளை காந்திகிராமம் டிரஸ்டில் சேர்த்து விட்டு, நான் பழனியில் வசிக்கிறேன். இந்த நிலையில் எனது வீட்டில் இருந்த ரூ.1 லட்சம், நில பத்திரத்தை ஒரு பெண் எடுத்து சென்றுவிட்டார். இதுபற்றி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த போது, விஷத்தை தின்று விட்டதாக கூறினார்.
இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். அதேநேரம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி விஷத்தை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.