விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

தற்கொலை

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள வடக்கிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் முருகவேல்(வயது 24). விவசாயியும், லாரி டிரைவருமான இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி புஷ்பா(23) என்ற மனைவியும், விகாஸ்(5) மற்றும் 7 மாத குழந்தையான சதீஷ் என 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முருகவேல் சொந்தமாக ஆட்டோ மற்றும் டிராக்டர் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். இதனால் கடன் சுமை ஏற்பட்டு, அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகவேல் வயலுக்கு தெளிக்கும் களைக்கொல்லியை(விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி முருகவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெக்கானிக்

இதேபோல் திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள காமராஜர் நகர் கென்னடி தெருவை சேர்ந்த சகாயராஜின் மகன் அந்தோணிராஜ்(வயது 26). இவருக்கு லலிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். அந்தோணிராஜ் காட்டூர் மஞ்சத்திடல் பாலம் பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் பட்டறையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக லலிதா, அந்தோணிராஜிடம் கோபித்துக் கொண்டு ஜெயில் பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அந்தோணிராஜ் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை அவரது பெற்றோர் ஜோசியம் பார்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்தோணி ராஜின் தம்பி மனைவி காலை உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அந்தோணி ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அரியமங்கலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story